டெல்லி:தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 62ஆவது வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று (செப். 15) குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர். அவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், "நமது உரையாடலின் போது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையாக பாதுகாப்பு உள்ளது. பாதுகாப்பு என்பது அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்களிலும் முக்கியதுவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் நோக்கம், உத்திப்பூர்வமான பொருளாதார, அறிவியல் பூர்வமான, அரசியல் ரீதியான, தேசிய பாதுகாப்பு தொழிலியல் அம்சங்கள் பற்றிய பாடத்தை படிப்பதாகும். இந்த தேசிய பாதுகாப்பு கல்லூரி பல ஆண்டுகளாக அதன் நோக்கத்தை நிறைவேற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கல்லூரியின் 62ஆவது பாடத்திட்டத்தில் ஆயுதப்படைகளில் இருந்து 62 பேரும், குடிமைப்பணிகளில் இருந்து 20 பேரும், நட்புறவு கொண்ட வெளிநாடுகளில் இருந்து 35 பேரும், பெருவணிகத்துறையில் இருந்து ஒருவரும் சேர்ந்துள்ளனர்.
இது ஒரு தனித்துவமான அம்சம். பல்வேறு கண்ணோட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை பாடத்திட்ட உறுப்பினர்களுக்கு இது வழங்குகிறது. இதன் மூலம் அவர்களது எண்ணங்களையும், புரிதல்களையும் விரிவுபடுத்த முடியும். மிகவேகமாக இயங்கிவரும் உலகில் நாம் வசிக்கிறோம். இதில் சிறிய மாற்றம் கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் இது பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டிருக்கும். கோவிட் பெருந்தொற்றின் வேகமும், பரவலும் மனிதகுலம் எதிர்கொண்ட அச்சுறுத்தலுக்கு ஒரு உதாரணமாகும்.