ஐதராபாத் : நிலவில் கந்தகம் இருப்பதை மீண்டும், சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் உறுதி செய்து இருப்பதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 06.04 மணி அளவில் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், மெதுவாக நிலவில் தரையிறங்கியது.
தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து தரையிறங்கிய பிரக்யான் ரோவர், நிலவில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 29ஆம் தேதி நிலவில் கந்தகம் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டுபிடித்ததாக இஸ்ரோ அறிவித்தது. மேலும், கந்தகம் தவிர்த்து அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட உலோகப் பொருட்களும் நிலவில் இருப்பதாக பிரக்யான் ரோவர் கண்டுபிடித்து உள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.
இந்நிலையில், நிலவில் கந்தகம் இருப்பதை மற்றொரு வழி மூலம் பிரக்யான் ரோவர் உறுதி செய்து உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. ஆல்பா எக்ஸ்- ரே துகள்கள் மூலம் நடத்திய சோதனையில் கந்தகம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை பிரக்யான் ரோவர் கண்டறிந்து உள்ளதாகவும், நிலவில் எரிமலை வெடிப்பு, விண்கல் மோதல் உள்ளிட்ட நிகழ்வுகளால் கந்தகம் உருவானதா என்றும் ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், நிலவில் கந்தகம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிவது தொடர்பான வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. அதில் 18 சென்டி மீட்டர் ஆல்பா எக்ஸ்-ரே துகள்களுக்கான கருவியை கொண்டு நிலவின் மேற்பரப்பில் 5 சென்டி மீட்டர் அளவு ஆராய்ந்த போது டிடெக்டர் கருவில் கந்தகம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் கண்டறியப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே கடந்த 29ஆம் தேதி, நிலவின் மேற்பரப்பில் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகிய தனிமங்கள் மற்றும் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) ஆக்ஸிஜன் (O) இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதிபடுத்தி உள்ளதாகவும் ஹைட்ரஜன் உள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :மும்பையில் நாளை 'I.N.D.I.A' கூட்டணி ஆலோசனை கூட்டம்.. 28 கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்!