ஹைதராபாத் (தெலங்கானா):இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதனையடுத்து, நிலவின் தென் துருவத்தில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மேற்கொள்ளும் ஆய்வு குறித்து இஸ்ரோ தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது.
அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 31) இஸ்ரோ தனது ‘X' வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில், “பாதுகாப்பான பாதையை நோக்கி ரோவர் சுழற்றப்பட்டது. இவ்வாறு ரோவர் சுழன்றதை லேண்டரின் இமேஜர் கேமரா காட்சிப்படுத்தி உள்ளது. இது சந்தாமாமாவில் (சந்திரன் அல்லது நிலவு) குழந்தை விளையாட்டுத்தனமாக மகிழ்ச்சியாக இருப்பது போன்றும், அதனை தாய் பாசத்துடன் பார்ப்பது போன்றும் இல்லையா?” என குறிப்பிட்டு உள்ளது.
அதே போன்று, நேற்று (ஆகஸ்ட் 30) இஸ்ரோ வெளியிட்ட பதிவில், “ஸ்மைல் ப்ளீஸ்.. இன்று (ஆகஸ்ட் 30) காலை விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்து உள்ளது. இந்த கருவியின் புகைப்படமானது, ரோவரில் பொருத்தப்பட்டு உள்ள நேவிகேஷன் கேமரா (Navigation Camera) மூலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சந்திரயான் 3 விண்கலத்திற்கான நேவிகேஷன் கேமராவை எல்க்ட்ரோ-ஆப்டிக்ஸ் அமைப்பின் ஆய்வகம் (Laboratory for Electro-Optics Systems - LEOS) மேம்படுத்தி உள்ளது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.