ஹைதராபாத்: நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்பட்டது. 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அன்று மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
இதன் மூலம் நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா நான்காவது நாடாக இடம் பெற்றது. குறிப்பாக நிலவில் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அறிவியல் உலகில் சாதனை படைத்துள்ளது.
அதனையடுத்து விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர், கடந்த 9 நாட்களாக நிலவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக, நிலவில் பள்ளம் இருப்பதைக் கண்டறிந்து, மாற்றுப் பாதையில் ரோவர் நகர்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: Aditya-L1 mission launch: விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1.. இஸ்ரோவுக்கு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் வாழ்த்து.!
இந்நிலையில் ஆத்தியா L1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை குறித்துப் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத், நிலவில் இருக்கும் வரை இருக்கும் இரவை தாங்க வேண்டும் என்பதற்காக, ரோவர் மற்றும் லேண்டரை ஸ்லீப் மோடில் வைக்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் 'விக்ரம்' லேண்டர் மற்றும் 'பிரக்யான்' ரோவர் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும், அதன் மூலம் விஞ்ஞானிகள் குழு நிறைய பணியை செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ரோவர், லேண்டர் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரம்வரை பயணித்து சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பிரக்யான் ரோவர் நிலவில் 100 மீட்டர் தூரம் வரை உலா வந்ததைத் தெரிவிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கமான X வலைத்தளத்தில், "Pragyan 100" என்று குறிப்பிட்டு, பிரக்யான் ரோவர் நிலவில் சுற்றி வந்த பாதையை வரைபடமிட்டு பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: Somnath : பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்1 வெற்றிகரமாக பிரிந்தது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!