டெல்லி: தபால் அலுவலக மசோதா 2023, சமீபத்திய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா, 1898ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தபால் அலுவலக சட்டத்தை மாற்றுவதற்கான சட்டமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பல காலகட்டமாக தபால் சேவைகள் என்பது கடிதங்கள், நிதி மற்றும் கொரியர் சேவைகளை வழங்கி வருகின்றது.
இதில், அனுப்பப்படும் கடிதங்களை பிரித்து பார்க்கவோ, தடுத்து நிறுத்தவோ தபால் அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இந்த புதிய மசோதா மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, அவசரநிலை மற்றும் பொதுபாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில், அனுப்பப்படும் கடிதங்களை இடைமறிக்க, திறக்க மற்றும் தடுத்து நிறுத்த தபால் அலுவலர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.
இந்த நிலையில், இன்று (டிச.04) மாநிலங்களவையில் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் முன்னிலையில், தபால் அலுவலக மசோதா 2023 மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு பலதரப்பட்ட அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்தும், கடும் எதிப்புகள் கிளம்பின. மேலும், தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, இதன் மூலம் தபால் அலுவலகம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இந்த விவாதத்தின் போது தகவல் தொடல்நுட்பத் தலைவர் அஷ்வினி வைஷ்ணவ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், “அஞ்சல் அலுவலகங்களின் சேவைகளை விரிவுபடுத்துவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்குப் பிறகு பல புதிய தபால் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த ஒன்பதரை ஆண்டுகளில், தபால் நிலையங்கள் சேவை வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. இது ஒருபோதும் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது.
தபால் அலுவலகத்தில் ஆள்சேர்ப்பு இல்லை என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது உண்மை அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காலத்தில், தபால் அலுவலகத்தை முற்றிலுமாக அழிக்க நினைத்தார்கள். ஆனால் அதை நடுத்து நிறுத்தியது பாஜக ஆட்சி தான்.