ஹைதராபாத்:அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிடே உலக சாம்பியன் செஸ் தொடரின் அரையிறுதியில் அமெரிக்க வீரர் ஃபேபியா கருவானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார் சென்னை வீரர் பிரக்ஞானந்தா. இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வே நாட்டை மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
மிகவும் விறுவிறுப்பாக ஆட்டம் நடந்த நிலையில் டைபிரேக்கர் போட்டியின் முதல் சுற்றில் 1-0 என்ற கணக்கில் நார்வேயின் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, கடுமையான முயற்சியை மேற்கொண்டார்.
இதனையடுத்து டைபிரேக்கர் முறையின் இரண்டாவது சுற்று தொடங்கியது இதில் கறுப்பு நிற காய்கள் உடன் விளையாடிய பிரக்ஞானந்தா கடும் முயற்சி உடன் விளையாடினார். இறுதியாக டைபிரேக்கர் சுற்றின் 2 வது சுற்றில் 0.5-0.5 என்ற கணக்கில் நிறைவு பெற்றது. நார்வேயின் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் .இதன் மூலம், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 6வது முறையாக கார்ல்சன் வென்று உள்ளார். இருப்பினும் இறுதி வரை போரடிய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,மத்திய அமைச்சர் அனுராத் தாக்கூர்,முன்னாள் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
பிரதமர் மோடி: உலகக் கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்! தனது அசாத்தியமான திறமைகள் மூலம் மற்றும் இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக கடுமையாகப் போட்டியிட்டுள்ளீர்கள்.இது சிறிய சாதனையல்ல. இனி வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள் பிரக்ஞானந்தா! என தெரிவித்துள்ளார்.