டெல்லி:பாஜகவை நிறுவியவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் வயது மூப்பு காரணமாக 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்தார். அவரது 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆக. 16) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' என்னும் வாஜ்பாயின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பங்கேற்று வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தினர்.
வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். முதல் முறையாக 1996ஆம் ஆண்டு 13 நாள்களும், அதன் பின்னர் 1998 முதல் 1999ஆம் ஆண்டு வரை 13 மாதங்களும் பிரதமராக இருந்தார். அதைத்தொடர்ந்து 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரையும் பிரதமராக பதவி வகித்துள்ளார்.