கர்நாடகா: நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள், இறுதியில் சித்தராமையாவை முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமாரை துணை முதலமைச்சராகவும் அறிவித்தனர்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரான சித்தராமையா மீண்டும் அம்மாநில முதல்வராக வரும் 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த சூழலில் அவரது அரசியல் பயணம் குறித்து காண்போம்...
இளமைக்காலம்:
சித்தராமையா, கடந்த 1948ஆம் ஆண்டு மைசூர் மாவட்டத்தில் உள்ள சித்தராமணா ஹூண்டி என்ற கிராமத்தில் பிறந்தார். மிகவும் எளிமையான குருபா கவுடா சமூகத்தில் பிறந்தவர். நடுத்தரக் குடும்பத்தில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வளர்ந்தவர். சிறுவயது முதலே படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.
பள்ளிப்படிப்பை முடித்த சித்தராமையா, மைசூரில் உள்ள யுவராஜா கல்லூரியில் சேர்ந்து, பி.எஸ்சி பட்டம் பெற்றார். பின்னர், சாரதா விலாசா கல்லூரியில் சட்டப் படித்தார். அதைத் தொடர்ந்து அதே கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளராக சிறிது காலம் பணி புரிந்தார். வழக்கறிஞராகவும் பணி புரிந்தார்.
அரசியல் பயணம்:
கல்லூரிக் காலம் முதலே சமூகம் சார்ந்த சிந்தனை கொண்டிருந்த சித்தராமையா, புகழ்பெற்ற சோசலிச சிந்தனையாளர் ராம் மனோகர் லோஹியாவால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் நுழைந்தார். பொது வாழ்க்கையில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த சித்தராமையா, கடந்த 1980ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர், 1983ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய லோக் தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கர்நாடக பட்டு வளர்ப்பு மற்றும் பட்டு தொழில் துறையின் அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
1991ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், 1994 சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தள வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த காலகட்டத்தில்தான் எச்.டி.தேவகவுடா அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 1996-ல் ஜே.எச்.படேலின் ஆட்சியில் துணை முதல்வராகவும் பதவி வகித்தார்.
1999-ல் ஜனதா தளம் கட்சி பிளவுபட்டபோது, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார். அதே ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2004 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசாங்கத்தில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்டார்.
2006-ல் காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அதே சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது அவரது அரசியல் பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது.
பின்னர், 2008-ல் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. அதில், புதிதாக உருவாக்கப்பட்ட வருணா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சித்தராமையா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், சித்தராமையா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அந்த நேரத்தில், பாஜக அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக காங்கிரசின் வரலாற்று சிறப்புமிக்க பெல்லாரி நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 2013 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதில் சித்தரமையா முதலமைச்சராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
2018 சட்டமன்றத் தேர்தலில், சித்தராமையா சாமுண்டீஸ்வரி மற்றும் பாதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். சாமுண்டீஸ்வரியில் தோல்வியை சந்தித்தார், ஆனால் பாதாமியில் வெற்றி பெற்றார். இதையடுத்து ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில், சித்தராமையா ஒருங்கிணைப்புக் குழு தலைவராக பதவி வகித்தார். 2019-ல் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தபோது, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மே. 10 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக கர்நாடக முதலமைச்சராக அவர் தேர்வாகி உள்ளார். வரும் 20ஆம் தேதி கர்நாடகவின் 24வது முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்க உள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா - திமுக உள்பட 19 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு!