திருவனந்தபுரம் : கேரளாவில் 3 லட்ச ரூபாய் பணத்திற்காக பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் சிசுவை விற்று தலைமறைவான பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார் குழந்தை விலை கொடுத்து வாங்கிய பெண்ணை கைது செய்தனர்.
கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தைக்காடு பகுதியில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, கரமானா பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் கடந்த 10 ஆம் தேதி 3 லட்ச ரூபாய் பணத்திற்காக விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத குழந்தை விற்பனை குறித்து கடந்த 17ஆம் தேதி கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் பச்சிளம் சிசுவை மீட்டனர். மேலும் குழந்தைகள் உதவி எண் மற்றும் குழந்தை நல அமைப்பினரிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்பனூர் சிறப்பு படைப் பிரிவு போலீசார் பிடிபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு உண்மைத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்த நிலையில், இரு தரப்பினர் குழந்தை விற்பனை செய்வது கூடி பேசிக் கொண்டதாகவும், அதற்காக சிசுவின் உண்மையான தாய்க்கு 25 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் கொடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.