கோழிக்கோடு:கேரள மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கம் தொடர்பான செய்தியை ஏசியா நெட் தொலைக்காட்சி வெளியிட்டது. அத்துடன் வடக்கு கேரளா பகுதியைச் சேர்ந்த 10 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது. ஆனால், இச்செய்தியில் உண்மைத் தன்மை இல்லை என்றும், போலியான செய்தி எனவும் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (SFI) குற்றம்சாட்டியது. போலிச் செய்தியை வெளியிட்டு மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அந்த அமைப்பு புகார் கூறியது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை எஸ்.எப்.ஐ மாணவர் அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கோழிக்கோட்டில் செயல்படும் ஏசியா நெட் தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியதுடன், தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தொலைக்காட்சி அலுவலகம் முன் பேனர்களையும் கட்டினர். இதுகுறித்து ஏசியா நெட் நிர்வாகம் அளித்தப் புகாரின் அடிப்படையில் எஸ்.எப்.ஐ மாணவர் அமைப்பைச் சேர்ந்த 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், போலி செய்தி வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஏசியா நெட் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஏசியா நெட் தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல் துறையினர் 8 பேர் இன்று (மார்ச் 5) சோதனை நடத்தினர். சர்ச்சைக்குரிய செய்தி தொடர்பாக கணினிகளில் உள்ள தரவுகளை சரிபார்த்தனர். அதன் உண்மைத் தன்மை குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்பவே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். போலீசாரையும், எஸ்.எப்.ஐ மாணவர் அமைப்பையும் செய்தி நிறுவனத்துக்குள் அனுப்பியிருக்கிறார். இதைக் கண்டிக்கிறேன். இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என கூறியுள்ளார்.
போலீசாரின் இந்த சோதனைக்கு பல்வேறு ஊடக கூட்டமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "ஏசியா நெட் தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் எஸ்.எப்.ஐ மாணவர் அமைப்பினர் அத்துமீறி நுழைந்ததற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஊடக நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு உதாரணம். ஏசியா நெட் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடுவானில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர் - அமெரிக்கன் ஏர்லைன்ஸில் சம்பவம்