கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உதவியுடன் நடத்தப்பட்ட மோசடி நிகழ்வில், மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை கேரள போலீசார் மீட்டு உள்ளனர். குறிப்பிட்ட நபரின் தொலைபேசி எண்ணை மோசடி நபர்கள் பொதுவான வாட்ஸ் அப் குழுவில் இருந்து எடுத்து, அதை ஹேக் செய்து, அந்நபரை மிரட்டி பணம் பறித்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பத்திரிகையாளர்களைச் சந்தித்த கோழிக்கோடு காவல் துறை துணை ஆணையர் கே.இ.பைஜு, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், அவர் இழந்த 40 ஆயிரம் ரூபாயை கேரள போலீஸ் சைபர் ஆபரேஷன் பிரிவால் மீட்கப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.
மோசடி கும்பல், பொதுவான வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள தொலைபேசி எண்ணை ஹேக் செய்து, அந்த குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் விவரங்களை சேகரித்து மோசடியில் ஈடுபட்டு உள்ளது. புகார்தாரருக்கு மோசடி செய்பவரிடமிருந்து வாட்ஸ் அப் அழைப்பு வந்தது. அவர் தனக்கு மிகவும் பரிட்சயமானவர் என்றும், குறிப்பிட்ட நபரின் முன்னாள் சக ஊழியரின் ஊரான ஆந்திராவைப் பற்றியும் குறிப்பிட்டு அவரது நம்பிக்கையைப் பெற்று உள்ளார்.
துபாயில் உள்ள உறவினரின் சிகிச்சைக்காக ராதாகிருஷ்ணனிடம் ரூ.40,000 பணம் கேட்டு அந்த கும்பல் கைவரிசையைக் காட்டி உள்ளது. அவர்கள் கேட்ட தொகையை ராதாகிருஷ்ணன் வழங்கிய நிலையில், அந்த கும்பல் மேலும் ரூ.35,000 கேட்டு உள்ளது. இதனை அடுத்து, ராதாகிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்படவே கேரள காவல் துறையின் சைபர் பிரிவை அணுகி உள்ளார்.