டெல்லி:பிரதமர் மோடி நேற்று (ஜன.5) பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க திட்டமிட்டிருந்தார்.
இதற்காக நேற்று பஞ்சாப் சென்றார். பதிண்டா விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடமான ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்தார். அப்போது, மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக சாலை மார்க்மாக சென்றார்.
தியாகிகள் நினைவிடத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் கான்வாய் ஒரு பறக்கும் பாலத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது சாலை மறியல் போராட்டம் நடப்பதாக வந்த தகவலையடுத்து, பிரதமரின் கான்வாய் அங்கு நிறுத்தப்பட்டது. 15-20 நிமிடங்கள் காத்திருந்து போராட்டம் நீடித்தால், பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பதிண்டாவிற்குத் திரும்பினார்.
இது குறித்து உள்துறை அமைச்சகம், "பஞ்சாப் அரசுக்கு பிரதமரின் பயணம் திட்டம் குறித்து முன்கூட்டியே தெரிவித்தும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. பாதுகாப்பு குறைபாடு குறித்து பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று (ஜன.6) பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார். அப்போது குடியரசுத் தலைவர், பிரதமர் மோடியிடம் நேற்று பஞ்சாப்பில் நடந்தவற்றைக் கேட்டறிந்து, பாதுகாப்பு குறைபாட்டிற்கு வருத்தம் தெரிவித்தார்.
குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, பஞ்சாப்பில் அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டிற்கு வருத்தம் தெரிவித்து, எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை!