டெல்லி:ஜி20 கூட்டமைப்பில், இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா உள்ளிட்ட இருபது நாடுகள் உள்ளன. இந்த ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.
ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், ஜி20 மாநாடு இந்தியாவில் நடக்க உள்ளது. ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு வரும் 9 மற்றும் 10ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், மாநாட்டிற்காக வருகை தரவுள்ள தலைவர்களின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாடு தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பிரதமர் நரேந்திரமோடி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "உலக நாடுகளின் பார்வை எப்போதும் ஜிடிபியை மையமாகக் கொண்டே இருக்கும். இது தற்போது மனிதர்களை மையப்படுத்தியதாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தில் இந்தியா ஒரு முக்கிய வினையூக்கியாக செயல்படுகிறது.