தியோகர்: நாட்டு மக்களை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே வஞ்சித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, வரும் தேர்தலில் தோல்வி அடைந்து வெளியேறுவது உறுதி என்று ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவரும், பிகார் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் ரயில்வேத் துறை அமைச்சருமான லாலு பிரசாத் தெரிவித்து உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் சென்று உள்ள ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், அங்கு பாபா பைத்யநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தியோகர் நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது, நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் நிகழ்வுகள், நாட்டின் நலனுக்கு உகந்ததாக இல்லை. பணவீக்க விகிதம் மற்றும் வேலைவாய்ப்பின்மை, எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாக அமைந்து உள்ளன. நாட்டு மக்கள், பசி, பட்டினி நிகழ்வுகளால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி, மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில், பிரதமர் மோடி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அவர் வெளியேற்றப்படுவது உறுதி.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை, 200 ரூபாய் குறைப்பதாக அறிவித்து உள்ளார். இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை ஆகும்.