டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30ஆம் தேதி), மான் கி பாத் (மனதின் குரல்) என்ற பெயரில், 103 வது மாதாந்திர வானொலி உரையை நாட்டு மக்களுக்கு ஆற்றினார். வெள்ளம் போன்ற பேரிடர்களை சமாளிக்க மக்களின் கூட்டு முயற்சிகளுக்காகவும், அதுகுறித்த விழிப்புணர்வைக் காட்டியதற்காக, நாட்டு மக்களைப் பாராட்டினார். 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கிட்டத்தட்ட 60,000 அம்ரித் சரோவர்கள், நாடு முழுவதும் 50,000 எண்ணிக்கையில் கட்டப்பட்டு வரும் அதே வேளையில், அவைகள் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குவதாக குறிப்பிட்டு உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 30 கோடி மரக்கன்றுகள் நடுவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொதுநல திட்டங்களில் பொதுமக்கள் தீவிரமாகப் பங்கேற்பதற்கு இது ஒரு சாதனை மற்றும் சிறந்த உதாரணம் என குறிப்பிட்டு உள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் சமீபத்தில் மேற்கொண்ட பயணம் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பகாரியா கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இன மக்கள், சுமார் நூறு கிணறுகளை மழை நீர் ரீசார்ஜ் மையங்களாக மாற்றி உள்ளதன் மூலம் நீர்-சேமிப்பு முறைகளை திறமையாக ஏற்றுக்கொண்டதாகக் கூறி உள்ளார்.
12,000 கோடி ரூபாய் மதிப்பிலான 10 லட்சம் கிலோ போதைப் பொருட்களை அழித்து இந்தியா புதிய சாதனை படைத்து உள்ளது. போதைப் பழக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். நாட்டின் சுதந்திர தினம் விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி 'ஹர் கர் திரங்கா' நிகழ்ச்சியின் தேசபக்தி பாரம்பரியத்தை தொடர மக்களை அவர் வலியுறுத்தி உள்ளார்.