இந்தூர்:பிரதமர் நரேந்திர மோடிகுப்பைகள் இல்லா நகரங்களை உருவாக்கும் தொலைநோக்கோடு, இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் கழிவை பணமாக்கும் மற்றும் சுழற்சி பொருளாதாரம் என்ற கொள்கைகளின் கீழ் அமல்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்தூரில் சாண எரிவாயு ஆலை அமைக்கப்பட்டது.
இந்த ஆலையில் நாளொன்றுக்கு 550 டன் பிரிக்கப்பட்ட மட்கும் குப்பைகள் சுத்திகரிக்கபடும். அதேபோல நாளொன்றுக்கு 17,000 கிலோ இயற்கை எரிவாயுவையும், 100 டன் இயற்கை உரத்தையும் உற்பத்தி செய்யும். இதனை பிரதமர் மோடி இன்று(பிப்.19) காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
சாண எரிவாயு ஆலை சிறப்பம்சங்கள்
இந்த ஆலை பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை குறைத்து இயற்கை உரத்தை வழங்குவதோடு, பசுமை எரிசக்தியையும் வழங்கும். இந்த ஆலை இந்தூர் நகராட்சி, இந்தூர் தூய்மை எரிசக்தி நிறுவனம், இந்தோ சுற்றுச்சூழல் ஒருங்கிணைந்த தீர்வுகள் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் உருவாக்கியது. இதற்காக ரூ.150 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யும் இயற்கை வாயுவில் 50 விழுக்காடு இந்தூர் நகராட்சி கொள்முதல் செய்துகொள்ளும்.
இந்த எரிவாயு நகர பேருந்துகளில் எரிபொருளாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் இதுவே முதல் முறையாகும். மீதமுள்ள எரிவாயு வெளிசந்தையில் விற்கப்படும். இந்த ஆலை உற்பத்தி செய்யும் இயற்கை உரங்கள் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயன்பாட்டில் ரசாயான உரங்களுக்கு மாற்றாக பயன்படுத்த வழங்கப்படும்.
இதையும் படிங்க:இந்தியா, ஐக்கிய அரபு இடையே வர்த்தக ஒப்பந்தம் 'கேம் சேஞ்சர்' - வர்ணித்த மோடி!