பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு தற்போது அதிலிருந்து லேண்டர் மற்றும் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக செய்து வருகிறது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆகஸ்ட் 26ஆம் தேதி பெங்களூருக்கு வரவுள்ளார்.
இந்த நிகழ்விற்கு வரும் பிரதமருக்கு பாஜக கொடிகள் கட்டாமல் விளம்பரங்கள் செய்யாமல் வந்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பெங்களூரு வருகை குறித்து விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் சுற்றுப்பயணத்தை முடித்து விமானம் மூலம் நாளை நேரடியாக பெங்களூரு வருகிறார். பெங்களூரு விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க பா.ஜ.க சார்ப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். பின் சூரியனை பற்றி ஆய்வு செய்யும் சூர்யாயான் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்தார். நாளை காலை 6 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக வெல்கம் மோடி ஏற்பாடுகள் பீன்யாவில் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு நடத்த திட்டமிட்டப்பட்டு இருந்தது ஆனால் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) அனுமதி அளிக்காததால் இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.