டெல்லி : இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு எகிப்து பிரதமர் முஸ்தபா மட்புலி உற்சாக வரவேற்பு அளித்தார்.
அமெரிக்க அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் நியூ யார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஏறத்தாழ 180 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கோடிக்கணக்கிலான மக்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அங்கிருந்து வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க ராணுவம் அளித்த ராணுவ அணிவகுப்பு மரியாதைபை ஏற்றுக் கொண்டார். தொடந்து அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அளித்த விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தொடர்ந்து அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சுகாதாரம், பருவநிலை மாற்றம் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் எழும் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் குளறுபடிகள், சீனாவின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
மேலும் இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவு, எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டு பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நிலவுக்கு 2024ஆம் ஆண்டு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் இஸ்ரோ கையெழுத்திட்டது. அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜிஇ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இந்துஸ்தான் எரோநாட்டிக்கல் நிறுவனம் இந்திய விமான படைக்கு என்ஜின் தயாரித்து வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.