டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி நாளை(அக்.05) இமாச்சல பிரதேச மாநிலம் செல்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். காலை 11.30 மணிக்கு பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
பின்னர் பிலாஸ்பூரிலுள்ள லுஹ்னு மைதானத்துக்கு மதியம் 12.45 மணிக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பொதுநிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்.
நாடு முழுவதும் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும் விதமாக பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. அக்டோபர் 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவமனை, பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் நிறுவப்பட்டுள்ளது.
சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, 18 சிறப்பு மற்றும் 17 தனிச்சிறப்பு பிரிவுகள், 64 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் மொத்தம் 750 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. இந்த மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அலட்சியம் வேண்டாம்; நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் - திமுகவினருக்கு ஸ்டாலின் மடல்