டெல்லி: ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர்த் தாக்குதல் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனிய அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கியுடன் 35 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.
உக்ரைன் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் உரையாடியுள்ளனர். மேலும், பேச்சுவார்த்தையின்போது ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனும் நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இதில், உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை குறித்து மோடியிடம், புதின் விவரித்துள்ளார்.
இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பான வெளியேற்றத்திற்காக உக்ரைனில் குறிப்பாக சுமி போன்றப் பகுதிகளில் தாக்குதலை நிறுத்தியதற்கு தனது பாராட்டுகளை தெரிவித்தது மட்டுமல்லாமல், உக்ரைன் அதிபருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படியும் கூறியுள்ளார்.
மேலும், சுமி நகரில் உள்ள இந்தியர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் வெளியேற்ற முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மோடி, புதினுடன் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு அளிப்பதாகப் புதின் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உக்ரைன் அதிபருடன் மோடி தொலைபேசியில் உரையாடல்