புதுடெல்லி: புத்த ஸ்தலங்களை இணைக்கும் முக்கிய ஊரான கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை, நாளை மறுநாள் (அக்.20) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இலங்கையிலிருந்து புத்த பிக்குகள் உள்ளிட்ட 125 நபர்களைத் தாங்கிய விமானம், முதல் விமானமாக இந்த சர்வதேச விமான நிலையத்துக்கு வரவுள்ளது.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம்
குஷிநகர் விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டதாகும். இந்த விமான நிலையத்தின் புதிய சர்வதேச முனையக் கட்டடம் 3,600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் புத்தரின் மகாபரிநிர்வாணா தலத்தை பார்வையிட வருகை தரும் சர்வதேச பயணிகளுக்கு தடையற்ற இணைப்பை இந்த சர்வதேச விமான நிலையம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான், தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, தைவான் போன்ற கணிசமான புத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் வாழும் நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் யாத்ரீகர்களையும் முன்வைத்து இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பயணத்தை எளிமையாக்கும்
இந்த விமான நிலையத்தைத் திறந்து வைப்பதைத் தொடர்ந்து, மகாபரிநிர்வாணா ஸ்தூபம், புத்த வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்தியாவில் புத்தமத யாத்ரீகர்களின் பயணங்களையும் அதிலுள்ள சிரமங்களையும் எளிமையாக்கும் வகையில் இந்த சர்வதேச விமான நிலையம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இந்நிலையில், குஷிநகரில் தொடங்கப்படும் சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 20 விழுக்காடு அதிகரிக்கும் என்றும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் உத்தரப் பிரதேச அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புத்த ஸ்தலங்களின் மையம் குஷிநகர்
மேலும், ”உத்தரபிரதேசத்தில் உள்ள குஷி நகர், உள்நாட்டு மற்றும் சர்வதேச வருகையாளர்கள், யாத்ரீகர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. லும்பினி, சாரநாத், கயா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புத்த தலங்களை உள்ளடக்கிய புத்த வட்டத்தின் மையப் புள்ளியாக குஷிநகர் உள்ளது.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இந்த விமான நிலையம் உலகம் முழுவதிலுமிருந்து புத்த மதத்தை பின்பற்றுபவர்களை குஷிநகரை நோக்கி ஈர்க்க உதவும். மேலும், புத்த மதம் தோன்றிய, உண்மையான புத்த தலமான இந்தியாவை, மக்களிடம் கொண்டு சேர்க்கவும், உலகம் முழுவதும் அதன் கொள்கைகளைப் பரப்பவும் உதவும்” என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:உலக சுகாதார அமைப்பின் அவசரகால மருந்துகள் பட்டியலில் கோவாக்சின்? அடுத்த வாரம் முடிவு!