டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப் 8) ‘கடமைப் பாதையை’ தொடங்கிவைக்க உள்ளார். இந்த நிகழ்வின் போது இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலையை திறந்துவைப்பார். அமிர்தகாலத்தில் புதிய இந்தியாவுக்கான பிரதமரின் 2ஆவது உறுதிமொழியான ‘காலனிய மனநிலையின் அனைத்து அடையாளத்தையும் அகற்றுதல்’ என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் ராஜபாதையும் அதன் அருகே உள்ள பகுதிகளும் போக்குவரத்து அதிகரிப்பும் அதன் அடிப்படை கட்டமைப்பும் அங்கு பயணம் செய்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தின.
பொதுக்கழிப்பறைகள், குடிநீர், அமருமிடங்கள், போதிய அளவு வாகனம் நிறுத்தும் இடம் போன்ற அடிப்படை வசதி குறைபாடு இருந்தது. மேலும் போக்குவரத்தை முறைப்படுத்தும் குறியீடுகள் போதாமை, தண்ணீர் வசதியில் மோசமான பராமரிப்பு, இடையூறுகளை ஏற்படுத்தும் வாகன நிறுத்துமிடம் என்ற பிரச்சனைகள் இருந்தன. குடியரசு தின அணிவகுப்பு மற்றும் இதர தேசிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யும் போது பொதுமக்கள் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவையும் இருந்தது. இத்தகைய பிரச்சனைகளை மனதில் கொண்டும் கலைஅம்சத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்ச்சியை உறுதிசெய்யவும் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன.
கடமைப்பாதையானது, நடைபாதைகள், புல்வெளிகள், புனரமைக்கப்பட்ட கால்வாய்கள், மேம்படுத்தப்பட்ட சமிக்ஞைகள், புதிய வசதி கொண்ட இடங்கள், விற்பனை அங்காடிகள் உட்பட மேம்படுத்தப்பட்ட பொதுவெளிகளையும், வசதிகளையும், கடமைப்பாதை கொண்டிருக்கும். பாதசாரிகளுக்கான புதிய சுரங்கப்பாதைகள், மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள், புதிய கண்காட்சி சட்டகங்கள், நவீன முறையிலான இரவு நேர விளக்குகள் போன்றவை பொதுமக்களின் அனுபவத்தை அதிகரிக்கவுள்ளன. திடக்கழிவு மேலாண்மை, பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி செய்தல், மழைநீர் சேகரிப்பு, எரிசக்தியை சேமிக்கும் விளக்கொளி முறை போன்ற பல நீடிக்கவல்ல சிறப்பு அம்சங்களும் உள்ளடங்கும்.
இந்தாண்டு முற்பகுதியில் பராக்கிரம தினத்தன்று (ஜனவரி 23) பிரதமரால் திறக்கப்பட்ட நேதாஜியின் மெய்நிகர் உருவச்சிலை உள்ள அதே இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலை பிரதமரால் திறந்துவைக்கப்படும். பளிங்கு கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை, நமது விடுதலைப் போராட்டத்துக்கு நேதாஜியின் தீவிர பங்களிப்புக்கு பொருத்தமான அஞ்சலியாகும். அவருக்கு நாடு கடன் பட்டிருப்பதன் அடையாளமாகவும் இது இருக்கும். தலைமை சிற்பியான திரு அர்ஜுன் யோகிராஜால் வடிக்கப்பட்டுள்ள இந்தச்சிலை 25 அடி உயரம் கொண்டதாகும். இது 65 மெட்ரிக்டன் எடையுள்ள ஒற்றை பளிங்கு கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:”ஓணம் திருநாள் இந்தியாவின் இலக்கை நிறைவு செய்வதாக அமையட்டும்” ஆளுநர் ரவி