போபால்:மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபடி ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஜூன் 27) பிரதமர் நரேந்திர மோடி 5 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று காலை 10.30 மணிக்கு ராணி கமலாபடி ரயில் நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி, 5 வந்தே பாரத் ரயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிகழ்வின் மூலம் ராணி கமலாபடி முதல் ஜபல்பூர், கஜூராஹோ - போபால் - இந்தூர், மடகோன் (கோவா) - மும்பை, தார்வாட் முதல் பெங்களூரு மற்றும் ஹாத்தியா முதல் பாட்னா போன்ற வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராணி கமலாபடி - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் சேவை ஜபல்பூரின் மஹாகவுசல் மண்டலத்தில் இருந்து போபாலின் மத்திய மண்டலத்தை இணைக்கும். அது மட்டுமல்லாமல், மாநிலத்தின் பெராகட், பச்மர்ஹி, சாத்பூரா மற்றும் இதர சுற்றுலாத் தலங்களையும் இந்த வழித்தடத்தில் கண்டு ரசிக்கலாம். இந்த வழித்தடத்தில் இயங்க உள்ள வந்தே பாரத் ரயில் சேவையானது, இதே வழித்தடத்தில் செல்லும் மற்ற விரைவு ரயில்களை விட 30 நிமிடங்கள் வேகமாகச் செல்லக் கூடியது ஆகும்.
கஜூராஹோ - போபால் - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:இந்தூரின் மல்வா மண்டலம் மற்றும் கஜூராஹோவின் பண்டல்கண்ட் மண்டலத்தை போபாலின் மத்திய மண்டலத்துடன் இணைக்கக் கூடியது. அதேநேரம், இந்த வழித்தடத்தில் தற்போது இயங்கக் கூடிய மற்ற விரைவு ரயில்களைக் காட்டிலும், இன்று தொடங்க உள்ள வந்தே பாரத் ரயில் சேவையால் ஒரு மணி நேர பயண நேரம் மிச்சப்படுத்தப்படும்.
மடகோன் - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:இது கோவாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை ஆகும். இந்த ரயில் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் முனையம் முதல் கோவாவின் மடகோன் ரயில் நிலையம் வரை இயங்கும். இந்த வந்தே பாரத் ரயில் சேவையின் மூலம் ஒரு மணி நேர பயணம் மிச்சப்படுத்தப்படும்.
தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் முக்கிய நகரங்களான கர்நாடகா - தார்வாட், ஹூப்பள்ளி மற்றும் தேவநாகிரி வழியாக பெங்களூருவை இணைக்கும். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பயன் அடைவார்கள். இந்த ரயில் சேவை மற்ற விரைவு ரயில்களைக் காட்டிலும் 30 நிமிடங்கள் வேகமாகச் செல்லக் கூடியது.
ஹாத்தியா - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இதுவே ஜார்க்கண்ட் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் இயங்க உள்ள முதல் வந்தே பாரத் ரயில் சேவை ஆகும். இது பாட்னா மற்றும் ராஞ்சி இடையிலான பகுதிகளை இணைத்து சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த ரயில் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு மணி நேரம் 25 நிமிட பயண நேரத்தைக் குறைக்கலாம்.
இந்த வந்தே பாரத் ரயில்களின் சேவைகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, மாலை 3 மணியளவில் ஷாதோலில் நடைபெற உள்ள ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். அப்போது, அவர் ராணி துர்காவதிக்கு மரியாதை செலுத்தி கெளரவிக்க இருக்கிறார். மேலும், சிக்கில் செல் அனீமியா எலிமினேஷன் மிஷனை தொடங்கி வைத்து, ஆயுஷ்மான் அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்... என்ன காரணம் தெரியுமா?