டெல்லி: துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆக. 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய துணை குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள ஜகதீப் தன்கர், ஆக. 11ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடுவிற்கு வழியனுப்பு விழா இன்று (ஆக. 8) நடைபெற்றது.
வெங்கையா நாயுடுவின் கொள்கை: இதில், பிரதமர் மோடி உள்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் உரையாற்றினர். பிரதமர் மோடி பேசுகையில், "மாநிலங்களவை தலைவர் பொறுப்பை நிறைவு செய்யும் வெங்கையா நாயுடு, விவாதத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர். அதில், தரத்தையும், மரபையும் பின்பற்றும் அவரின் தனித்துவமான முறை, அடுத்து வருபவர்களுக்கு பயனளிக்கும்.
தொடர்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முட்டைகட்டை போடுவது, அவையை அவமதிப்பது போன்றது என்பார் வெங்கையா நாயுடு. அவரின் கொள்கையே,'அரசு முன்மொழியட்டும், எதிர்கட்சிகள் எதிர்கட்டும், அவை முடிவெடுக்கட்டும்' என்பதுதான்.
ஆழமான ஒன்-லைனர்கள்:வெங்கய்யா நாயுடுவிடம் போற்றத்தக்க விஷயங்களில் ஒன்று, இந்திய மொழிகளின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வம். அது இந்த அவையை அவர் தலைமை தாங்கிய விதத்தில் பிரதிபலித்தது. வெங்கையா நாயுடுவின் ஒன்-லைனர்கள் (ஒற்றை வரி வாசகம்) அவரின் புத்திக்கூர்மையை பறைசாற்றும்.