டெல்லி: மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப். 24), பிரதமர் மோடியின் 88ஆவது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. இதை வெறும் தொழில்நுட்ப வசதி என்று மட்டும் பார்க்க முடியாது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையால் அனைத்து இடங்களிலும் நேர்மையான சூழல் உருவாகிறது” என்றும் கூறினார்
தொடர்ந்து பேசிய அவர், “இப்போது நாட்டில் தினசரி 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. மார்ச் மாதத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது” என தெரிவித்தார்.
இதையடுத்து நீர் சேமிப்பு குறித்து பேசிய அவர், “ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கைக்கும் அடிப்படையாக இருக்கும் நீர், மிகப்பெரிய வளம். அதனால்தான் நமது முன்னோர்கள் நீர் சேமிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். மக்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் உள்ள பழைய குளங்கள், கிணறுகள் மற்றும் ஏரிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அமிர்த சரோவர் இயக்கம் மூலம், நீர் பராமரிப்போடு கூடவே அந்தப் பகுதியைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முடியும். இதனால் உள்ளூர் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த முடியும். நீரைச் சேமிப்போம், உயிரைக் காப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுப்போம்” என்று கேட்டுக்கொண்டார்
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு?