டெல்லி: இந்தியா முழுவதும் 44 இடங்களில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற 70,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு, பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி, விர்சுவல் முறையில் வழங்கினார். பணி நியமன ஆணை பெற்றவர்களில் பெரும்பாலோர் வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். பின்னர் காணொலி காட்சி முறையில், பிரதமர் மோடி, சிறப்புரையாற்றினார். இந்த உரையில், எதிர்க்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார்.
அவர் மேலும் கூறியதாவது, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், பொதுத்துறை வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி இழப்பு மற்றும் செயல்படாத சொத்துக்களுக்கு (NPA) பெயர் பெற்றதாக விளங்கி வந்தன. அவைகள் தற்போது, லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறி உள்ளன. 'ஃபோன் பேங்கிங்' மோசடி, முந்தைய அரசாங்கத்தின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. மேலும் இது நாட்டின் வங்கி முறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது எனக் குறிப்பிட்டு உள்ளார்.
சக்திவாய்ந்த சில தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் கடன்களை வழங்குவதற்கு தொலைபேசி வங்கி முறையைப் பயன்படுத்திய முந்தைய அரசாங்கத்தின் கீழ் வங்கித் துறை எவ்வாறு "அழிக்கப்பட்டது" என்பதை பிரதமர் எடுத்துரைத்து உள்ளார். சிறு வங்கிகளை இணைப்பதன் மூலமும், நிபுணத்துவத்தை புகுத்துவதன் மூலமும் வங்கிகளின் நிர்வாகத்தை வலுப்படுத்த தனது அரசாங்கம் எடுத்த பல நடவடிக்கைகளையும், பிரதமர் மோடி பட்டியலிட்டு உள்ளார்.