டெல்லி: ஜம்மு-காஷ்மீர் ரோஸ்கர் மேளாவில் இன்று (அக்.30) காணொலி வாயிலாகப் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீர் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் எனவும்; பழைய சவால்களைக் கடந்து, வேகமான வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளையும் அணுகுமுறைகளையும் அதற்கான சிந்தனைகளையும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதற்கான வளர்ச்சிப்பாதையில் செல்வதற்கு இந்திய குடிமக்களான நாம் அனைவருக்கும் சம உரிமை உண்டு எனவும்; அதை மேலும் உயர்வான நிலைக்குக்கொண்டு செல்லவேண்டுமெனவும் கூறினார். அத்துடன் ஜம்மு-காஷ்மீரின் புதிய வளர்ச்சிக்காக நாம் இணைந்தே செயல்படுவோம் என்றார்.
இதைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உணவுப்பொருள் மற்றும் வழங்கல் துறை, கால்நடைத்துறை, நீர் வளத்துறை, கல்வி மற்றும் கலாசாரத்துறை உள்ளிட்ட 20 அரசு துறைகளில் 3,000 இளைஞர்களுக்கு அரசுப்பணிக்கான பணிநியமன ஆணைகளைப்பெற்றதற்கு வாழ்த்துகளைத்தெரிவித்தார்.
மேலும், 700 பேருக்கு அரசுப்பணிக்கான நியமன ஆணைகள் வழங்குவதற்கானப்பணிகள் முழுவீச்சில் நடந்துவருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளால் ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஜம்மு-காஷ்மீரில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், புதிய இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள், 7 புதிய மருத்துவக்கல்லூரிகள், 2 மாநில புற்றுநோய் சிகிச்சை மையங்கள், 15 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் எனவும் கூறினார். இதற்காக காஷ்மீரில் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 'இங்கு இருந்த ஊழலைக்கண்ட பொதுமக்கள் அதனை வெறுத்தனர். இவைகளைக் களைவதற்காக லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா குழுவினர் ஆற்றிய பணிகள் பாராட்டுதலுக்குரியது. வெளிப்படைத் தன்மைக்கு முக்கியத்துவம் அளித்துவரும் ஜம்மு-காஷ்மீரில் அரசுப்பணிக்கு வரும் இளைஞர்கள் இதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: அஸ்ஸாமில் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 7 ஜெர்மானியர்கள் கைது