ஹிரோஷிமா: ஜி7 அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஹிரோஷிமா நகரில் நிகழ்ந்த அணுகுண்டு தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த பூங்காவில், இந்திய பிரதமர் மோடி மட்டுமல்லாது, ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட மற்ற தலைவர்களும் மரியாதை செலுத்தினர். அருங்காட்சியகத்திற்கு மோடி சென்ற போட்டோக்களை வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்து உள்ளார். நினைவகத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஜி7 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட குழு புகைப்படத்தையும் டுவீட் செய்து உள்ள அவர், "ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்" . ஜி7 உச்சி மாநாட்டிற்காக, பிரதமர் மோடி, மே 19 முதல் 21 ஆம் தேதி வரை ஜப்பான் நாட்டிற்கு, வருகை தந்து உள்ளார். இந்த மாநாட்டில், பிரதமர் மோடி, உணவு, உரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில், உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசுவார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
காந்தி சிலை திறப்பு :ஜப்பானின் ஹிரொஷிமா நகரத்தில், மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி ''அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான காந்தியின் கொள்கைகள் உலகளவில் எதிரொலித்து கோடிக்கணக்கானவர்களுக்கு பலத்தை அளிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா இஹ் சில்வாவை, சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மற்ற நாடுகளின் தலைவர்களையும், அவர் சந்தித்து பேச உள்ளார். முன்னதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும், பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் இறுதியில், "உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இது ஒட்டுமொத்த உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை. இதை நான் மனிதநேய பிரச்சினையாகவும், மனித விழுமியங்களின் பிரச்சினையாகவும் தான் பார்ப்பதாக" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா - இங்கிலாந்து இடையேயான பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்துவது, பாதுகாப்பு, உணவு, எரிசக்தி, பிராந்திய அச்சுறுத்தல் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பிரச்சினைகள் குறுத்து பேசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: G7 Summit : ஹிரேசிமாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்த பிரதமர் மோடி.. தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை!