டெல்லி:2023 ஆம் ஆண்டுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் ஹங்கோரி ஃபுடாபெஸ்ட் தேசிய தடகள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டி ஹங்கேரியில் நடக்கும் முதல் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி என்ற பெருமைக்குரியது. உலகளவில் இந்த சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் பெரும் மதிப்புமிக்க போட்டியாக கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று(ஆக.26) சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் ஹீட்ஸ் சுற்றில் புதிய வரலாற்றை படைத்து உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறி இந்திய அணி அசத்தியுள்ளது. இந்திய தொடர் ஓட்டத்திற்கு(relay) தேர்வான முகமது அனஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் இடம்பெற்று இந்த குழுவில், போட்டியில் அவர்களின் அசாத்திய திறனை வெளிப்படுத்தி ஆசிய சாதனையை முறி அடித்துள்ளனர். இதில் ராஜேஷ் ரமேஷ் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
போட்டியின் தொடக்கத்தில், முதலில் தொடங்கிய முகமது அனஸின் வேகம் பின்னோக்கியே இருந்தது. பின்னர் இரண்டாம் இடத்தில் அமோஜ் ஜேக்கப்பிடம் ரிலே பட்டன் கைமாறிய போது தன் வேகத்தை அதிகரித்து ஆறாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முந்தி மற்ற நாடுகளை பின் தள்ளினார். அதனைத் தொடர்ந்து பட்டனை கைபற்றிய முகமது தொடர்ந்து இரண்டாவது இடத்திலேயே நீடித்து மற்ற வீரர்களுக்கு டஃப் கொடுத்தார். இறுதியில் ரமேஷ் இரண்டாம் நிலையில் போட்டியை 2 நிமிடங்கள் 59 விநாடிகளில் புதிய ஆசிய சாதனையுடன் நிறைவு செய்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய ஆண்கள் அணி முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.