டெல்லி:உலகம் முழுவதும் வெறும் 7,500 சிவிங்கி புலிகள் மட்டுமே உள்ளன. பெரும்பாலானவை நமீபியா, போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, அங்கோலா, சாம்பியா, தான்சானியா மற்றும் கென்யாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் 1967ஆம் ஆண்டு முதன் முதலில் காணப்பட்டன. அதன்பின் கடைசியாக சத்தீஸ்கா் மாநில வனப்பகுதியில் 1947ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுத்தைகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக 1952ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
வேட்டையாடுதல், குறைந்து வரும் வாழ்விடம், உணவு சங்கிலியில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அழிந்துபோனதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வனம் மற்றும் புல்வெளி சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மீட்டமைக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும் சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் ஆப்பிரிக்க நாடான நமீபியா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அந்த ஒப்பந்ததின் படி 74 ஆண்டுகளுக்கு பின் 8 சிவிங்கிப்புலிகள் நமீபியா நாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டன. இந்த சிவிங்கிப்புலிகளை மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி செப் 17ஆம் தேதி விடுத்தார். இந்த சிவிங்கிப்புலிகள் தொற்று நோய்தடுப்பு காரணமாக தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2 சிவிங்கிப்புலிகள் முதல்கட்டமாக வன பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மகிழ்ச்சியான செய்தி! கட்டாய தனிமைக்குப் பிறகு 2 சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவில் அவற்றின் இருப்பிடங்களில் விடுவிக்கப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன். எஞ்சிய சிறுத்தைகளும் விரைவில் விடுவிக்கப்படும். அனைத்து சிறுத்தைகளும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், இருப்பிடத்திற்கு ஏற்றவாறு தங்களை பொருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கேரளாவில் தொடரும் படையப்பா யானையின் அட்டகாசம் - சுற்றுலாப் பயணிகள் அவதி