டெல்லி: நாடு முழுவதும் ஆயிரத்து 309 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக "அம்ரித் பாரத்" என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், குறிப்பிட்ட ரயில் நிலையங்களை தேர்வு செய்து, அவற்றை உலகத் தரத்திற்கு மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதற்கட்டமாக அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 6) காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
அதன்படி, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 55 ரயில் நிலையங்களும், பீகாரில் 49 ரயில் நிலையங்களும், மகாராஷ்ட்ராவில் 44 ரயில் நிலையங்களும், மேற்குவங்க மாநிலத்தில் 37 ரயில் நிலையங்களும், மத்திய பிரதேசத்தில் 34 ரயில் நிலையங்களும், அசாமில் 32 ரயில் நிலையங்களும், ஒடிஷாவில் 25 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்படவுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் 22 ரயில் நிலையங்களும், குஜராத் மற்றும் தெலங்கானாவில் 21 ரயில் நிலையங்களும், ஜார்க்கண்டில் 20 ரயில் நிலையங்களும், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18 ரயில் நிலையங்களும், ஹரியானாவில் 15 ரயில் நிலையங்களும், கர்நாடகாவில் 13 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.