நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உள்கட்டமைப்பு, பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி இத்திட்டத்தை நரேந்திர மோடி இன்று (அக். 13) தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் காணொலி வாயிலாக மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
அரசுத் துறைகள், அமைப்புகளின் ஒத்துழைப்பை அதிகரித்து, அவற்றின் செயல்பாட்டை ஒருங்கிணைக்க இந்தக் கதி சக்தி திட்டம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலம், நாட்டில் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஆகியவை அதிகரிக்கும். பொருள்கள், சேவைகளின் போக்குவரத்து எளிமைப்படுத்தப்பட்டு நேர விரயம் தடுக்கப்படும்.
மேலும், விநியோகச் சங்கிலியைக் குறைக்கவும், உள்நாட்டுத் தயாரிப்புகளை உலக அளவில் கொண்டுசேர்க்கவும் இத்திட்டம் வழிவகுக்கும்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாட்டின் உள்கட்டமைப்பை கட்டி எழுப்புவதற்கான நரேந்திர மோடியின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவுதான் இத்திட்டம். இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நாடு முழுவதும் நடைபெறும் வணிகத்தை எளிமையாக்கவும் உதவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தல்: வரலாற்று வெற்றியை நோக்கி திமுக!