சூரத் (குஜராத்): இந்தியாவின் வைரத் தொழில் நகரமாக விளங்கும் குஜராத்தின் சூரத் நகரத்தில், உலகின் 90 சதவிகித வைரங்கள் பட்டைத் தீட்டப்படுகின்றன. இந்த சூரத்தில்தான், கரடு முரடாக இருக்கும் வைரங்களை வெட்டுதல், பட்டைத் தீட்டுதல் மற்றும் வியாபாரம் செய்தல் உள்ளிட்ட அனைத்தும் நடைபெறுகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சியில் வர்த்தகத்தின் பங்கு என்பது அதிகம். எனவே, அந்த வர்த்தகத்தை முறையாக கையாள்வதும் அவசியமாகிறது. அந்த வகையில், இந்த வைர வியாபாரத்தில் ஈடுபடுவோர் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் விதமாக, ‘சூரத் வைர சந்தை’ (Surat Diamond Bourse) என்ற பிரமாண்ட அலுவலக கட்டடம், சூரத் நகருக்கு அருகிலுள்ள கஜோத் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.
இது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான அதிநவீன இல்லமாக பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கு முன் சூரத்தில் நடைபெற்று வந்த வைரம் வெட்டுதல், பட்டைத் தீட்டுதல் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட பணிகளில் சுமார் 65 ஆயிரம் பேர் ஈடுபட்டு வந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் மூலம் சுமார் 1.5 லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமான பென்டகனை முந்தியுள்ள இந்த அலுவலக வளாகம், 67 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது. கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 வைர வர்த்தக அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டடமாக உள்ளது. மேலும், இது உலக நாடுகளின் மொத்த பார்வையையும் இந்தியா பக்கம் ஈர்த்துள்ளது.
முன்னதாக மும்பையில் உள்ள பல வைர வியாபாரிகள், ஏற்கனவே தங்கள் அலுவலகங்களை இங்கு கைப்பற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவை ஏலத்திற்குப் பின்னர் நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டதாக, சூரத் வைர சந்தையின் ஊடக தொடர்பாளர் தினேஷ் நவடியா சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
35.54 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட கட்டமைப்பு, 300 சதுர அடி முதல் 1 லட்சம் சதுர அடி வரையிலான அலுவலக இடங்களுடன், 15 தளங்களைக் கொண்டுள்ளது. மேலும் வர்த்தகம், ஒத்துழைப்பு, நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திற்கும் மையமாக பார்க்கப்படும் இந்த வைர சந்தை அலுவலக கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.17) திறந்து வைத்தார்.
இதையும் படிங்க:நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டவர்களின் செல்போன்கள் எரிந்த நிலையில் மீட்பு!