டெல்லி :உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நமோ கட்டில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வுகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். காசி தமிழ் சங்கமம் துவக்க விழாவில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் நாட்டின் 75வது கொண்டாட்ட விழாவான ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம் நிகழ்வு மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டது. இதன் முதற்படியாக கடந்த 202ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், இதன் அடுத்த கட்டமாக காசி தமிழ் சங்கமம் 2.0 திட்டத்தை பிரதமர் மோடி இன்று (டிச. 17) வாரணாசியில் தொடங்கி வைத்தார். ஒரே பாரதம் உன்னத பாரத்ம் என கருத்தை முன்னிறுத்தும் வகையில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் வரும் 30ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வட மற்றும் தென் இந்தியாவின் வரலாறு, பாரம்பரிய மற்றும் கலாசார நிகழ்வுகளை கொண்டாடும் வகையில் இந்த காசி தமிழ் சங்கமம் கொண்டாடப்படுகிறது. காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏறத்தாழ ஆயிரத்து 400 பேர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.