தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘அடுத்த ஆண்டு சுதந்திர தினத்திலும் உரையாற்றுவேன்’ - நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொடக்கப்புள்ளி வைத்து பிரதமர் உரை! - சந்திரயான்

Independence day 2023: உலகையே புரட்டிப் போட்ட கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்தியாதான் உலகத்தை வழிநடத்தி வருவதாக பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டு உள்ளார்.

கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகத்தையே இந்தியா தான் வழிநடத்துவதாக உள்ளது- சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி!
கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகத்தையே இந்தியா தான் வழிநடத்துவதாக உள்ளது- சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி!

By

Published : Aug 15, 2023, 11:18 AM IST

டெல்லி: இந்திய நாட்டின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி சுதந்திர தின உரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், “சர்வதேச அளவில் இந்தியாதான் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கி வருகிறது. நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் ஆவர். உலகின் நிலைத்தன்மைக்கு இந்தியாதான் தற்போது காரணமாக உள்ளது. இந்தியா, சர்வதேச அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை விரைவில் எட்டும் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகத்தையே இந்தியாதான் வழிநடத்துவதாக உள்ளது.

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவையே நமது நாட்டின் தாரக மந்திரம் ஆகும். இந்தியா வளர்ச்சிப் பயணத்தில் தொடர்ந்து நிலையாக இருக்க வேண்டும் எனில், அதற்கு நிலையான அரசு அவசியம் ஆகின்றது. நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் உறுதியான அரசை எதிர்பார்க்கின்றனர். கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் இந்திய மக்கள், வலுவான மற்றும் பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுத்திருந்தனர். இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக விளங்கிய ஊழல் என்ற அரக்கனை அழித்தோம். மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்காமல் உங்களுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வந்து உள்ளோம்.

2014ஆம் ஆண்டில், உலகப் பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்த நம் நாட்டை இன்று 140 கோடி இந்திய மக்களின் முயற்சியால், 5வது இடத்திற்கு முன்னேற்றி உள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் வறுமைக்கோட்டு நிலையில் இருந்து முன்னேறி நடுத்தர வர்க்கத்தினர்களாக மாறி உள்ளனர். அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும், நாட்டு மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா பெருந்தொற்று நிகழ்விற்குப் பிறகு, முழுமையான சுகாதாரமே முதல் தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதே ஆயுஷ் துறை ஆகும். இப்போது உலகமே ஆயுஷ் மற்றும் யோகா நிகழ்வை மிகவும் உன்னிப்புடன் உற்றுநோக்கி வருகிறது.

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு முன்னோக்கி கொண்டு செல்லும் விஷயங்களில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியும் மிக முக்கியமான ஒன்று. சர்வதேச அளவில் விமானத் துறையில் அதிக அளவிலான பெண் விமானிகளைக் கொண்டு உள்ள நாடாக இந்தியா விளங்குவதில் நாம் அனைவரும் இந்த நேரத்தில் பெருமிதம் கொள்ள வேண்டும். வான்வெளி அறிவியலில், இஸ்ரோவின் முத்தாய்ப்பான திட்டமான சந்திரயான் விண்கலத்தின் நடவடிக்கைகளை பெண் விஞ்ஞானிகள் தலைலையிலான குழு முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.

அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று அடுத்த ஆண்டு செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடம் சுதந்திர தின உரையாற்றும்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை பட்டியலிட உள்ளேன்” என கூறினார்.

இதையும் படிங்க: அமைதியின் மூலம் மட்டுமே மணிப்பூரில் தீர்வு காண முடியும் - சுதந்திர தின விழாவில் பிரதமர் உரை!

ABOUT THE AUTHOR

...view details