பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் உள்ள இரண்டு அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மூன்று பேர், மூத்த பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆர்எஸ்எஸ் மூத்தத் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசி உரையாடல்கள் இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் ஒட்டுக்கேட்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தியர்களை உளவு பார்க்கிறதா பெகாசஸ்
இந்தத் தகவல் திருட்டில் இஸ்ரேலிய நிறுவனமான பெகாசஸ் (Pegasus) நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் அரசுக்கு விற்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதை மத்திய அரசு மறுத்துள்ளது.
குறிப்பிட்ட யாரையும் உளவு பார்க்கவில்லை, அவர்களின் செல்போனும் ஒட்டுக் கேட்கப்படவில்லை. இதற்கு எந்தவிதமான அடிப்படையான வலுவான ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டு என்று மத்திய அரசு கூறியுள்ளது. இவ்விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்
இது குறித்து பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத், "இது நாட்டின் அரசும், நிர்வாகமும் பலவீனமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. மக்கள் மத்தியில் அச்சமான சூழ்நிலை உள்ளது.
பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் இவ்விவகாரத்தைத் தெளிவுப்படுத்த வேண்டும். மகாராஷ்டிராவிலும் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாகப் புகார் இருந்தது. பல உயர் அலுவலர்களுக்கு அதில் தொடர்பிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கான விசாரணை நடைபெற்றுவருகிறது.
முதலமைச்சரின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம்
ஆனால், இவ்விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனம் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்பதில் ஈடுபட்டுள்ளது. இது மிகப்பெரிய பிரச்சினை ஆகும். ஊடகவியலாளர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியம் இல்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:டெலிபோன் ஒட்டுக்கேட்பு- மோடி அரசுக்கு சு.சுவாமி எச்சரிக்கை!