டெல்லி பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று(மே.28) திறக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதேபோல், தமிழ்நாட்டின் செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவினார். இதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, நாடாளுமன்ற மக்களவையில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. அப்போது, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையிலும், புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பை குறிக்கும் வகையிலும், 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, மக்களவையில் குழுமி இருந்த மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில அழியாத தருணங்கள் இடம்பெறும். அத்தகைய அழியாத ஒரு நாள்தான் இது. புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல. இது, 140 கோடி இந்திய மக்களின் லட்சியச் சின்னம். இது இந்தியாவின் வலிமையை உலகிற்கு எடுத்துரைக்கிறது. இந்த புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும்.
புதிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க செல்கோல் இன்று நிறுவப்பட்டது. சோழர் காலத்தில் செங்கோல் என்பது நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக இருந்தது. செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நமது அதிர்ஷ்டம். இனி இந்த அவையில் நடவடிக்கைகள் தொடங்கும் போதெல்லாம் இந்த செங்கோல் நம்மை ஊக்குவிக்கும்.