கவுகாத்தி:நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த 2 மாதங்களாக கொளுந்துவிட்டு எரியும் வன்முறைத் தீ இன்றும் அணையவில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், மணிப்பூர் மக்கள் புதிய மோதல்களைச் சமாளித்து வருகின்றனர். இதற்கிடையே, மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங், வெள்ளிக்கிழமை (ஜுன் 30ஆம் தேதி) பிற்பகலில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று செய்திகள் வெளியாகின.
மறுப்பு: பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் வன்முறைச் சூழலைக் கட்டுப்படுத்தத் தவறியதால், முதலமைச்சர் என். பிரேன் சிங், ஆளுநர் அனுசுயா உகேயை ஜூன் 30ஆம் தேதி மாலை 3 மணிக்குச் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், இந்த தகவல்களை பொய்யாக்கும் வகையில், அனைத்து ஊகங்கள் மற்றும் ஊடக அறிக்கைகளை நிராகரித்து, முதலமைச்சர் என் பிரேன் சிங், தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவது இல்லை என்று ட்விட்டர் பதிவில் உறுதிபடத் தெரிவித்து விட்டார்.
முதலமைச்சர் பிரேன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அவரது இல்லம் முன்பு, ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என ஆதரவாளர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி பிரேன் சிங்கை வலியுறுத்தினர்.