புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் முதலமைச்சரான ரங்கசாமி தலைமையில், ஆட்சி நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி அலுவலகத்தில் அவர் வழிபட்டு வரும் அப்பா பைத்தியசாமி, காமராஜரின் படங்கள் பெரிய அளவில் இடம் பெற்றிருக்கும்.
அலுவலக சுவர்களில் ஓவியங்களும் பொருத்தப்பட்டிருக்கும். இதன்படி முதலமைச்சரின் இருக்கைக்கு பின்புறம் புதுவை கடற்கரையில் பழைய துறைமுகம் படம் வைக்கப்பட்டிருந்தது.
அருணாச்சலேஸ்வரர் கோயில்
இந்தநிலையில் அந்தப் படம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலும் பின்னணியில் கார்த்திகை தீபம் ஏற்றும் மலையும் தெரியும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அறையில் இடம் பெற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் படம் ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் உடைய ரங்கசாமியின் விருப்பத்திற்கு ஏற்ப இந்தப் படம் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருவண்ணாமலைக்குச் செல்வது வழக்கம்.
அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோயிலுக்குச் செல்லாமல் நகருக்குள் எங்காவது ஓரிடத்தில் நின்று கார்த்திகை தீபத்தை பார்த்துவிட்டு, அவர் புதுச்சேரி திரும்புவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரத்த கொடையாளர்களுக்குப் பாராட்டு: பரிசுகள் வழங்கிய முதலமைச்சர்