நீலகிரி மாவட்டத்தில் நான்கு பேரை அடித்துக் கொன்ற T 23 புலி, அக்டோபர் 15ஆம் தேதி வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. பின்னர் பிடிபட்ட புலிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் T 23 புலியின் உடல்நிலை குறித்து, மைசூரு உயிரியல் பூங்கா மீட்பு மைய மருத்துவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மருத்துவரைப் பார்த்து ஆக்ரோஷம்
அதில், “T 23 புலி காடுகளில் இருந்து சிறைபிடிக்கப்பட்டதால் மன அழுத்தத்தின் காரணமாக சோர்வாக உள்ளது. புலியின் முன் கால் வீக்கம் குறைந்து வருவதால், கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் நன்றாக வேலை செய்வதாக தெரிகிறது.
நேற்று (அக்.18) இரவு சுமார் 8 கிலோ மாட்டிறைச்சியை சாப்பிட்ட புலி, எலும்புகளை சாப்பிடவில்லை. முதல் முறையாக இரத்த ஹீமோகுளோபினின் அளவு மேம்பட்டு ஒன்பது புள்ளிகளுக்கு மேல் சென்றது.
சீரம் அளவு லேசான கல்லீரல் வீக்கத்தைக் காட்டுகிறது. மன அழுத்தத்தை அதிகரிக்கக் கூடிய அளவுக்கு, இதுவரை மயக்க மருந்து செலுத்தும் முயற்சி செய்யப்படவில்லை.
T 23 நாளை முதல்முறையாக மரம், பச்சை வேலிகளால் சூழப்பட்ட திறந்த பகுதிக்கு புலி செல்ல முடியும். சில சமயங்களில் மருத்துவரிடம் புலி ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக T 23 புலியின் ஆரோக்கியம் கணிசமான முன்னேற்றத்தை காட்டுகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஓடும் ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணியை நொடியில் காப்பாற்றிய காவலர்!