புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கடற்கரைச் சாலை முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும் ஒயிட் டவுன் பகுதியில் நாளை மதியம் முதல் ஜனவரி காலை 9 மணிவரை போக்குவரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை கடற்கரையில் கொண்டாட புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காவல் துறைத் தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா, காவல் துறைத் துணைத் தலைவர் ஆனந்த மோகன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, "உருமாறிய கரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவிவருகிறது. எனவே மத்திய அரசு அளித்துள்ள புதிய வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். புதுச்சேரி கடற்கரைச் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி! இதனையொட்டி வையிட் டவுன் பகுதியில் நாளை மதியம் 2 மணி முதல் மறுநாள் 01.01.2021 காலை 9 மணி வரை கனரக வாகனங்கள், போக்குவரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மாநில எல்லைகளில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவர்.
புதுச்சேரி கடற்கரைச் சாலை, ஒயிட் டவுன் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மதுபானங்களுக்கு கடற்கரைச் சாலையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்புடன் புத்தாண்டை கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.