ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று (ஜூலை 11) பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், ஜெய்ப்பூரிலுள்ள அமர் அரண்மனைக்கு முன்னால் மலையில் அமைந்துள்ள கண்காணிப்பு கோபுரத்தில் மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்தனர். இதில் செல்பி எடுத்துக்கொண்டிருந்த குழந்தைகள் உள்ளிட்ட 11 பேரும் அடக்கம்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மீட்புக் குழுவினர் இதுவரை 30 பேரை மீட்டுள்ளனர். பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்னல் தாக்கி குழந்தைகள் உயிரிழப்பு
இதற்கிடையில், கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த கன்வாஸ் தெஹ்ஸில் கார்டா கிராமத்தில் ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்குள் சென்ற 4 குழந்தைகள் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல், தோல்பூரின் குடின்னா கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் ஆடுகள் மேய்ப்பதற்காக சென்ற இடத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். சாக்சுவின் பகாரியா கிராமத்தில் வீட்டின் வெளியே நின்றிருந்த 12 வயது குழந்தை மின்னல் தாக்கியதில் மயங்கி விழுந்தது.