தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் பயங்கரவாதிகள்: நால்வருக்கு 14 நாள்கள் காவல் - ஜீஷன் கமர்

டெல்லியில் நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய ஆறு பயங்கரவாதிகளில், நால்வரை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பாட்டீயாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆறு சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள்
ஆறு சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள்

By

Published : Sep 15, 2021, 5:16 PM IST

டெல்லி: டெல்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர் சந்தேகத்திற்குரிய ஆறு பயங்கரவாதிகளை நேற்று (செப். 14) கைது செய்தனர்.

இவர்கள் ஆறு பேரும் ஜான் முகமது அலி ஷேக், ஜீஷன் கமர், ஒசாமா, முகமது அபு பக்கர், மூல்சந்த், அமீர் ஜாவத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், ஒசாமா, ஜீஷன் கமர் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்றவர்கள் எனக் கூறப்படுகிறது.

இவர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாக சிறப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வெவ்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள்

டெல்லி உள்பட பல முக்கிய நகரங்களில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் நிதியுதவி பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஜான் முகமது அலி சேக் (எ) தமீர் காலியா மும்பையையும், ஒசாமா (எ) ஷமி டெல்லி ஜாமியா நகரையும், மூல்சந்த் (எ) சாது, ஜீஷன் கமர், முகமது அபு பக்கர், அமீர் ஜாவத் ஆகியோர் உத்தரப் பிரதேசத்தின் வெவ்வேறு நகரங்களை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பட்டியலில் இந்துத்துவா தலைவர்கள்

இந்நிலையில், ஜான் முகமது அலி ஷேக், ஒசாமா, மூல்சந்த், முகமது அபு பக்கர் ஆகியோரை டெல்லி பாட்டீயாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து இவர்களை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜீஷன் கமர், அமீர் ஜாவத் ஆகியோர் இன்று (செப்.15) மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த இவர்களுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது என்றும், இவர்களின் தாக்குதல் பட்டியலில் பல இந்துத்துவா தலைவர்கள் உள்ளனர் எனவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இது மோடி தந்த பணம்: அடம்பிடித்ததால் மோசடி வழக்கில் சிறை சென்ற நபர்!

ABOUT THE AUTHOR

...view details