புடாபெஸ்ட் :உலக தடகள சாம்பியன்ஷிப் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஷ் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி, தேசிய சாதனையை முறியடித்தார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஷ் தடை ஓட்டம் நடைபெற்றது. மினி மாரத்தான் போல் இந்த போட்டி காணப்பட்டாலும், ஓட்டத்தின் போது ஆங்காங்கே இடர்கள் வைக்கப்பட்டு இருக்கும் என்பதால் இந்த போட்டிக்கு ஸ்டீபில்சேஷ் என பெயரிடப்பட்டு உள்ளது.
மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஷ் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி கலந்து கொண்டார். 3 ஆயிரம் மீட்டர் தடை ஓட்டத்தை பருல் சவுத்ரி 9 நிமிடம் 15 புள்ளி 51 விநாடிகளில் நிறைவு செய்து 11வது நபராக எல்லைக் கோட்டை தாண்டினார். போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும், தேசிய அளவிலான சாதனையை முறியடித்து பருல் சவுத்ரி புது மைல்கல் படைத்து உள்ளார்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த லலிதா பாபர் என்பவர் இதற்கு இதே பிரிவில் 9 நிமிடம் 19 புள்ளி 76 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பருல் சவுத்ரி முறியடித்து புதிய தேசிய சாதனையை படைத்து உள்ளார். அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பருல் சவுத்ரி தகுதி பெற்றார். பஹ்ரைன் வீராங்கனை வின்பிரட் யாவி 3 ஆயிரம் மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.