சூரத்: குஜராத் சட்டப்பேரவைத்தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகளிடையே கடும்போட்டி நிலவுகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் முழு மூச்சாக இறங்கியுள்ளன. நகரங்கள், கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக வேட்பாளர்கள் பிரசாரத்திற்காக பல்வேறு வழிகளை கடைப்பிடித்து வருகின்றனர். வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தங்களது சின்னத்தைப் பதிய வைக்கும் வகையிலும், ஆடைகளை தயாரித்து வழங்கி வருகின்றனர்.
தங்களது சின்னம், கட்சிக் கொடி பொறிக்கப்பட்ட புடவைகள், நகைகள், டீ சர்ட்டுகள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், வளையல்கள், மோதிரங்கள், செயின்கள், ஹேர் கிளிப் உள்ளிட்ட பெண்கள் பயன்படுத்தும் பொருட்களிலும் சின்னங்களை பொறித்து வழங்குகின்றனர். குறிப்பாக மாங்கல்யத்திலும் தாமரை சின்னத்தைப் பொறித்துள்ளனர்.
வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பெண் நிர்வாகிகள் மட்டுமல்லாது, கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.
ஜவுளிகளின் நகரமாக விளங்கும் சூரத்தில் தேர்தல் காலங்களில் ஆடைகள் தயாரிப்புக்கு அதிக டிமாண்ட் இருப்பது வழக்கம். அதன்படி, இந்த தேர்தலிலும் தேர்தல் பிரசாரத்திற்காக ஆடைகள் தயாரிப்பு சூடு பிடித்துள்ளது. ரெடிமேட் மற்றும் டிஜிட்டல் பிரிண்ட் புடவைகள் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சின்னங்கள் பொறிக்கப்பட்ட பைகள் இவற்றில் தாமரை, கை, துடைப்பம் உள்ளிட்ட சின்னங்கள் மட்டுமல்லாமல், பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களின் படங்களையும் அச்சிடுகின்றனர். இந்த முறை டிசைனர் புடவைகளுக்கு அதிக டிமாண்ட் இருப்பதாகவும், வேலைப்பாடுடன் இருப்பதால் இந்த புடவைகளை அனைவரும் விரும்பி அணிவதாகவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவில் மனைவி.. காங்கிரசில் தங்கை.. ஜடேஜாவின் வேண்டுகோள்!