காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி, நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளத்தாக்குப் பகுதியில் நிலவும் களச்சூழலை ஆய்வுசெய்யும் வகையில் நாடாளுமன்றக் குழு இன்று காஷ்மீருக்குச் செல்லவுள்ளது.
எம்பி சிராக் பாஸ்வான் தலைமையிலான குழுவில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரீநகருக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து அவர்கள் ஆலோசிக்கவுள்ளனர்.
காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் குழுக்களையும் சமூகப் பிரிவினரையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர். இந்தப் பயணத்தின்போது, பொது மக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருடன் நாடாளுமன்றக் குழு கலந்துரையாடவுள்ளது. ஸ்ரீநகரில் நடைபெறவுள்ள ரியல் ஹீரோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இக்குழு, காவல் துறை, அரசு நிர்வாகம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்குப் பதக்கம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.
நிர்வாகத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக, ஸ்ரீநகர் காவல் துணை ஆணையர் ஷஹீத் இக்பால் சவுத்ரிக்கும் காவல் துறை பிரிவில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக கத்துவா நகர காவல் மூத்தகண்காணிப்பாளர் சைலேந்திர மிஸ்ராவுக்கும் விருது வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காகச் சுகாதாரப் பணியாளர்களுக்கும் நாடாளுமன்றக் குழு விருது வழங்கவுள்ளது.