காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி, நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் களச்சூழலை ஆய்வு செய்யும் வகையில் நாடாளுமன்ற குழு மார்ச் 21ஆம் தேதி காஷ்மீருக்கு செல்லவுள்ளது.
காஷ்மீரில் ஆய்வு மேற்கொள்ளும் நாடாளுமன்ற குழு - காஷ்மீர்
ஸ்ரீநகர்: சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு, களச் சூழலை ஆய்வு மேற்கொள்ளும் வகையில், நாடாளுமன்ற குழு மார்ச் 21ஆம் தேதி காஷ்மீருக்கு செல்லவுள்ளது.
காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் குழுக்களையும் சமூக பிரிவினரையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர். இந்த பயணத்தின்போது, பொது மக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருடன் நாடாளுமன்ற குழு கலந்துரையாடவுள்ளது. ஸ்ரீநகரில் நடைபெறவுள்ள ரியல் ஹீரோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இக்குழு, காவல் துறை, அரசு நிர்வாகம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.
நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக, ஸ்ரீநகர் காவல் துணை ஆணையர் ஷஹீத் இக்பால் சவுத்ரிக்கும் காவல் துறை பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக கத்துவா நகர மூத்த காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர மிஸ்ராவுக்கும் விருது வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக சுகாதார பணியாளர்களுக்கும் நாடாளுமன்ற குழு விருது வழங்கவுள்ளது.