டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் பூஜ்ய கேள்வி நேரத்தில் பேசிய திமுக மாநிலங்களவை எம்.பி. வில்சன், மத்திய அரசின் சுகாரதாரத் திட்டங்களுக்கான மருத்துவமனை மற்றும் டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சை மையங்களை அதிகளவில் அமைக்கக் கோரினார்.
மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களில், மத்திய அரசுப் பணியாளர்கள், ரயில்வே மற்றும் மத்திய ஆயுதப் படை வீரர்கள், ஓய்வூதியதாரர்கள் என லட்சக்கணக்கான பயனாளர்கள் உள்ள நிலையில், குறைந்தளவிலான மருத்துவமனைகள் இயங்குவதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் நாட்டில் மொத்தமாக 2,014 மருத்துவமனைகளே உள்ளதாகவும், தமிழகத்தில் வெறும் 48 மருத்துவமனைகள் மற்றும் டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சை மையங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அந்த மருத்துவமனைகள் குடியிருப்பு மற்றும் நகரப்பகுதிகளைத் தாண்டி தொலைதூர பகுதிகளில் இருப்பதால் பயனர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார்.
சென்னை உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பெருநகரங்களில் கூட மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தால் அங்கீகரிப்பட்ட பல்நோக்கு மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் இல்லை என எம்.பி. வில்சன் தெரிவித்தார்.
மேலும் தனியார் மருத்துவமனைகள், இன்சூரனஸ் நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ சேவைகளை வழங்குவது போல் மத்திய குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை, மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வுத்துறைகள் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எம்.பி. வில்சன் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:கும்பகோணம் மாநகராட்சி திமுக - காங். கவுன்சிலர்கள் இடையே மோதல்!