தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடாளுமன்றத்தில் இன்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அமளி - 5வது நாளாக இரு அவைகளும் முடக்கம்!

அதானி குழும விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தி லண்டனில் பேசியது குறித்து ஆளுங்கட்சியினரும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால், தொடர்ந்து ஐந்தாவது நாளாக இரு அவைகளும் முடங்கின.

Rajya
Rajya

By

Published : Mar 17, 2023, 3:01 PM IST

டெல்லி: அதானி குழும பங்குச்சந்தை மோசடி தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விவாதிக்கக் கோரி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.

அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல், லண்டனில் இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசிய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கடந்த நான்கு நாட்களாக முடங்கின.

இந்த நிலையில், இன்று(மார்ச்.17) காலை நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின. மக்களவை கூடியதும், நாட்டை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்புக் கோர வேண்டும் என பாஜகவினர் முழக்கமிட்டனர். ராகுல் காந்தி மன்னிப்புக்கோராமல், அவரை அவையில் பேச அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதானி குழும முறைகேடு குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இதனால், மக்களவையில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. பின்னர் எம்.பி.க்களின் அமளியால் தொடர்ந்து ஐந்தாவது நாளாக மக்களவை இன்றும் முடங்கியது. அதேபோல், மாநிலங்களவையும் முடங்கியது.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

அண்மையில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, இந்திய ஜனநாயகம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவினர், அவர் ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதித்ததாக குற்றம்சாட்டினர். இதற்காக ராகுல் காந்தி மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

லண்டனில் இருந்து திரும்பிய ராகுல் காந்தி பாஜகவினர் குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் வகையில் நேற்று பேட்டியளித்தார். அதில், அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் தான் பேசிய அனைத்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதானி குறித்து தான் ஆட்சேபத்திற்குரிய வகையில் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

லண்டனில் பேசியது குறித்து தான் விளக்கமளிக்க விரும்புவதாகவும், ஆனால் விளக்கமளிக்க மக்களவையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தான் விளக்கமளிக்க வேண்டியது அவசியம் என்றும், அதற்குப் பிறகுதான் ஊடகங்களுக்கு விளக்கமளிக்க முடியும் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: 'நான் நாட்டைப் பற்றி தரக்குறைவாக பேசவில்லை' - ராகுல் காந்தி விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details