ஐதராபாத்:பாலிவுட் நட்சத்திரம் பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகவ் சத்தா ஆகியோரின் திருமணம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தை உற்றுநோக்குவோர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சியின் சமீபத்திய வீடியோக்களும் படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் சத்தாவின் நிச்சயதார்த்தம், கடந்த மே மாதம் டெல்லியின் கபுர்தலா ஹவுஸில் குடும்பம் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து இவர்களது திருமணம் இன்று (செப். 24) மாலை 4 மணிக்கு பாரம்பரிய திருமண சடங்குகளுடன் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மணமக்கள் இருவரும் நேற்றே (செப். 23) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு வந்தடைந்தனர். அங்கு இருவருக்கும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமண விழாவின் முதல் நிகழ்வாக இன்று மதியம் 1 மணியளவில் மணமகனான சத்தாவுக்கு சேரா அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் மணமகன் மணமகள் வீட்டிற்குச் செல்வதற்கு முன், மாப்பிள்ளையின் தலையில் சேராவைக் கட்டும் சடங்கு நடத்தப்படும். இதனை தொடர்ந்து மணமகனைக் குதிரையில் அமர வைத்து ஊர்வலம் வரும் விழாவான பராத் ஊர்வலம் லேக் பேலஸில் இருந்து திருமண இடத்திற்கு படகில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஜெயமாலா எனும் மாலைகளை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி, மாலை 3:00 மணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருமணம், மணமகளின் பிரியாவிடை ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு நடந்த திட்டமிடப்பட்டு உள்ளன. விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் உள்ளிட்டோரும் ராகுல் சத்தா - பிரனீதி சோப்ரா திருமண விருந்தில் பங்கேற்று உள்ளனர்.
திருமண விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு உள்ளன. பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் இந்த திருமண விழாவில் கலந்து கொள்கின்றனர். பிரனீதி சோப்ராவின் நெருங்கிய உறவினரான பிரியங்கா சோப்ராவும் திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருமண விழாவில் திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: மீண்டும் தள்ளிப்போன 'அயலான்’ ரிலீஸ்... சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வருத்தம்!